[3:174]

இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.

[3:175]

ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.

[3:176]

குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.

[3:177]

யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.

[3:178]

இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.

[3:179]

(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.

[3:180]

அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.