[70:40]

எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

[70:41]

(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.

[70:42]

ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.

[70:43]

நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.

[70:44]

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.

Nûh

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[71:1]

நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்.

[71:2]

என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் என்று கூறினார்.

[71:3]

அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.

[71:4]

(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்" (என்றும் கூறினார்).

[71:5]

பின்னர் அவர், "என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.

[71:6]

ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.

[71:7]

அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.

[71:8]

பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.

[71:9]

அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.

[71:10]

மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.