[70:11]

அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

[70:12]

தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

[70:13]

அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

[70:14]

இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

[70:15]

அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.

[70:16]

அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

[70:17]

(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

[70:18]

அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)

[70:19]

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

[70:20]

அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,

[70:21]

ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.

[70:22]

தொழுகையாளிகளைத் தவிர-

[70:23]

(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.

[70:24]

அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.

[70:25]

யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

[70:26]

அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.

[70:27]

இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.

[70:28]

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.

[70:29]

அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-

[70:30]

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

[70:31]

எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.

[70:32]

இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

[70:33]

இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.

[70:34]

எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

[70:35]

(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

[70:36]

நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.

[70:37]

வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.

[70:38]

அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?

[70:39]

அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.