[57:4]

அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

[57:5]

வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.

[57:6]

அவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.

[57:7]

நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்கிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.

[57:8]

உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).

[57:9]

அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்.

[57:10]

அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

[57:11]

அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.