[54:50]

நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.

[54:51]

(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?

[54:52]

அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.

[54:53]

சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.

[54:54]

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்

[54:55]

உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.

Ar-Rahmân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[55:1]

அளவற்ற அருளாளன்,

[55:2]

இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.

[55:3]

அவனே மனிதனைப் படைத்தான்.

[55:4]

அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.

[55:5]

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.

[55:6]

(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.

[55:7]

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.

[55:8]

நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.

[55:9]

ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.

[55:10]

இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

[55:11]

அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

[55:12]

தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.

[55:13]

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

[55:14]

சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.

[55:15]

நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.

[55:16]

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?