[51:52]

இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.

[51:53]

இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.

[51:54]

ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.

[51:55]

மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.

[51:56]

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.

[51:57]

அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.

[51:58]

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

[51:59]

எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.

[51:60]

ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.

At-Tûr

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[52:1]

தூர் (மலை) மீது சத்தியமாக!

[52:2]

ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!

[52:3]

விரித்து வைக்கப்பட்ட,

[52:4]

பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!

[52:5]

உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!

[52:6]

பொங்கும் கடலின் மீது சத்தியமாக!

[52:7]

நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.

[52:8]

அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

[52:9]

வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்,

[52:10]

இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது,

[52:11]

(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.

[52:12]

எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,

[52:13]

அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.

[52:14]

அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.