[46:21]

மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.

[46:22]

அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.

[46:23]

அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.

[46:24]

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது

[46:25]

அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும் (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.

[46:26]

உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

[46:27]

அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.

[46:28]

(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியதையும், இட்டுக் கட்டியவையுமாகும்.