[45:14]

ஈமான் கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் கூறிவிடும்; அல்லாஹ்வுடைய (தண்டனைக்கான) நாட்களை நம்பாதவர்களை அவர்கள் மன்னித்து (அவர்களைப் பற்றி அல்லாஹ்விடம் பரஞ் சாட்டிவிடட்டும்); ஜனங்களுக்கு அவர்கள் தேடிக் கொண்ட வினைக்குத் தக்கபலனை அவன் கொடுப்பான்.

[45:15]

எவர் ஸாலிஹான (நல்ல) அமலை செய்கிறாரோ அது அவருக்Nகு நன்மையாகும்; அன்றியும், எவர் தீமையைச் செய்கிறாரோ, அது அவருக்கே தீமையாகும், பின்னர் உங்கள் இறைவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.

[45:16]

நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.

[45:17]

அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கடடளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.

[45:18]

இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

[45:19]

நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு யாதோர் உதவியும் செய்து விட முடியாது. இன்னும் நிச்சயமாக அநியாயக்காரர்களில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையவர்களுக்கு அல்லாஹ்வே பாதுகாவலன்.

[45:20]

இது (குர்ஆன்) மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டதாகவும், உறுதியான நம்பிக்கையுடைய சமூகத்தாருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

[45:21]

எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்.

[45:22]

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் உண்மையுடன் (தக்க காரணத்தைக் கொண்டே) படைத்துள்ளான்; ஒவ்வோர் ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்குத் தக்க கூலி கொடுக்கப்படுவதறாகாக அவை அநியாயம் செய்யப்படமாட்டா.