Al-Jâthiyah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[45:1]

ஹா, மீம்.

[45:2]

இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.

[45:3]

முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[45:4]

இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் (நம்பிக்கையில்) உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

[45:5]

மேலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.

[45:6]

இவை அல்லாஹ்வுடைய வசனங்கள், இவற்றை (நபியே!) உம்மீது உண்மையுடன் ஓதிக் காண்பிக்கிறோம்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எதனைத் தான் நம்பப் போகிறார்கள்.

[45:7]

(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.

[45:8]

தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.

[45:9]

நம் வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை அவன் அறிந்து கொண்டால், அதைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறான்; அ(த்தகைய)வர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

[45:10]

அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது அல்லாஹ்வையன்றி, எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது) மேலும், அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு.

[45:11]

இது (குர்ஆன்)தான் நேர்வழிகாட்யாகும், எவர்கள் தம்முடைய இறைவனின் வசனங்களை நிராகரித்து விட்டார்களோ, அவர்களுக்கு நோவினை மிகுந்த கடினமான வேதனையுண்டு.

[45:12]

கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.

[45:13]

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன.