[42:11]

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அலன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

[42:12]

வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் அவனிடமே இருக்கின்றன தான் நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான் - நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவன்.

[42:13]

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும் , ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.

[42:14]

அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே யன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டடிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர்.

[42:15]

எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பன், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றும் கூறுவீராக.