[39:41]

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.

[39:42]

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[39:43]

அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! "அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?" (என்று.)

[39:44]

பரிந்து பேசுதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!

[39:45]

மேலும், அல்லாஹ்(வின் பெயர்) மட்டும் தனித்தவனாகக் கூறப்பட்டால் மறுமையை ஈமான் கொள்ளாதவர்களின் இருதயங்கள் சுருங்கி விடுகின்றன் மேலும் அவனை அன்றி மற்றவர்(களின் பெயர்)கள் கூறப்பட்டால், உடனே அவர்கள் பெரிதும் மகிழ்வடைகிறார்கள்.

[39:46]

அல்லாஹ்iவே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் பகிரங்கமானவற்றையும் அறிபவனே! உன் அடியார்கள் வேறுபட்டு(த் தமக்கிடையே தர்க்கித்து)க் கொண்டிருக்கும் விஷயத்தில் நீதான் தீர்ப்புச் செய்வாய் என்று (நபியே!) நீர் கூறுவீராக!

[39:47]

மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்.