[39:32]

எனவே, அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்து தன்னிடம் உண்மை வந்த போது அதனைப் பொய்ப்பிப்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? (அத்தகைய) காஃபிர்களுக்கு நரகில் தங்குமிடம் இல்லையா?

[39:33]

அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள்.

[39:34]

அவர்களுக்கு, அவர்கள் விரும்புவது (எல்லாம்) அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கின்றது இதுவே நன்மை செய்து கொண்டிருந்தோருக்குரிய நற்கூலியாகும்.

[39:35]

அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ் விலக்கி, அவர்களுடைய (நற்காரியங்களுக்குரிய) கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகியதைக் கொண்டு அவர்களுக்குக் கொடுப்பான்.

[39:36]

அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர் மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.

[39:37]

அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா?

[39:38]

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்; "அல்லாஹ் தான்!" என்று அவர்கள் நிச்யமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக "அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்; அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?" (நபியே!) மேலும் நீர் கூறுவீராக "அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்."

[39:39]

என்னுடைய சமூகத்தாரே! உங்கள் நிலைமைக்குத் தக்கவாறு நீங்கள் (செய்ய வேண்டியதைச்) செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் (என் நிலைமைக்குத் தக்கவாறு செயல்) செய்து வருபவன் - ஆகவே, நீங்கள் விரைவில் அறிவீர்கள்! என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[39:40]

இழிவு படுத்தும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனையும் யார் மீது இறங்குகிறது? (என்பதை அறிவீர்கள்).