[37:77]

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.

[37:78]

மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.

[37:79]

ஸலாமுன் அலாநூஹ் - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.

[37:80]

இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்யமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

[37:81]

நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.

[37:82]

பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.

[37:83]

நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர்தாம்.

[37:84]

அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).

[37:85]

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி "நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,

[37:86]

அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?

[37:87]

அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன? (என்று கேட்டார்.)

[37:88]

பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

[37:89]

நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன் என்றும் கூறினார்.

[37:90]

எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.

[37:91]

அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று "(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?" என்று கூறினார்.

[37:92]

உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை? (என்றும் கேட்டார்.)

[37:93]

பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி தம் வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.

[37:94]

(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.

[37:95]

அவர் கூறினார்! "நீங்களே செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?"

[37:96]

உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.

[37:97]

அவர்கள் கூறினார்கள்; "இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்."

[37:98]

(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.

[37:99]

மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்."

[37:100]

என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக (என்று பிரார்த்தித்தார்).

[37:101]

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

[37:102]

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்."