[37:52]

(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.

[37:53]

நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா? என்றும் கேட்டான்.

[37:54]

(அவ்வாறு கூறியவனை) "நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?" என்றும் கூறுவார்.

[37:55]

அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.

[37:56]

(அவனிடம்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!

[37:57]

என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.

[37:58]

(மற்றொருமுறையும்) நாம் இறந்து விடுவோமா?

[37:59]

(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர் என்று கூறுவார்.

[37:60]

நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.

[37:61]

எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.

[37:62]

அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) 'ஜக்கூம்' என்ற மரமா?

[37:63]

நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.

[37:64]

மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.

[37:65]

அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.

[37:66]

நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.

[37:67]

பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

[37:68]

அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.

[37:69]

நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.

[37:70]

ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே இவர்களும் விரைந்தார்கள்.

[37:71]

இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

[37:72]

மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

[37:73]

பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

[37:74]

அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.

[37:75]

அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.

[37:76]

ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.