[35:4]

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.

[35:5]

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.

[35:6]

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.

[35:7]

எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.

[35:8]

எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.

[35:9]

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.

[35:10]

எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.

[35:11]

அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.