[34:49]

கூறுவீராக "சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை இனிச்செய்யப் போவதுமில்லை."

[34:50]

கூறுவீராக "நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு 'வஹீ' மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சமயாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்."

[34:51]

இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நிர் காண்பீராயின்; அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.

[34:52]

மேலும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்" என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?

[34:53]

ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.

[34:54]

மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.

Fâtir

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[35:1]

அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.

[35:2]

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

[35:3]

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.