[29:64]

இன்னும், இவ்வுலக வாழ்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே (நித்தியமான) வாழ்வாகும் - இவர்கள் (இதை) அறிந்திருந்தால்.

[29:65]

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில் வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை (பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே) இணைவைக்கின்றனர்.

[29:66]

அவர்கள், நாம் அவர்களுக்கு அளித்துள்ளவற்றுக்கு மாறு செய்து கொண்டு, (இவ்வுலகின் அற்ப) சுகங்களை அனுபவிக்கட்டும் - ஆனால் (தம் தீச்செயல்களின் பயனை) அறிந்து கொள்வார்கள்.

[29:67]

அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? இன்னும், அவர்கள் பொய்யானவற்றை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கிறார்களா?

[29:68]

அன்றியும், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட - அல்லது தன்னிடம் சத்தியம் வந்த போது அதைப் பொய்ப்பிப்பவனைவிட அநியாயம் செய்பவன் யார்? (இத்தகைய) காஃபிர்களுக்கு ஒதுங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது,

[29:69]

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்.

Ar-Rûm

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[30:1]

அலிஃப், லாம், மீம்.

[30:2]

ரோம் தோல்வியடைந்து விட்டது.

[30:3]

அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.

[30:4]

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்வடைவார்கள்.

[30:5]

அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.