[28:6]

இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).

[28:7]

நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்.

[28:8]

(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.

[28:9]

இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.

[28:10]

மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.

[28:11]

இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள்.

[28:12]

நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்."

[28:13]

இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.