[24:44]

இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.

[24:45]

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

[24:46]

நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.

[24:47]

அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம் என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.

[24:48]

மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.

[24:49]

ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.

[24:50]

அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.

[24:51]

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் "நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்" என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.

[24:52]

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.

[24:53]

இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி) "நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்து தான் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்" என்று கூறுவீராக.