[18:54]

இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.

[18:55]

மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவரையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.

[18:56]

இன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

[18:57]

எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.

[18:58]

(நபியே!) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.

[18:59]

மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.

[18:60]

இன்னும் மூஸா தம் பணியாளிடம், "இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.

[18:61]

அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.