[17:18]

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.

[17:19]

இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத் தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில் நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.

[17:20]

இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.

[17:21]

(நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரியது, மேன்மையிலும் மிகப் பெரியதாகும்.

[17:22]

அல்லாஹ்வுடன் மற்றோர் ஆன்டவனை நீர் (இணை) ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர் பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து விடுவீர்.

[17:23]

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

[17:24]

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

[17:25]

(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.

[17:26]

இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ் செய்யாதீர்.

[17:27]

நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.