[16:7]

மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.

[16:8]

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.

[16:9]

இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.

[16:10]

அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.

[16:11]

அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.

[16:12]

இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

[16:13]

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.

[16:14]

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.