[12:104]

இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இஃது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.

[12:105]

இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.

[12:106]

மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

[12:107]

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?

[12:108]

(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."

[12:109]

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?

[12:110]

(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.

[12:111]

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.