[12:23]

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.

[12:24]

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

[12:25]

(யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) "உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?" என்று கேட்டாள்.

[12:26]

(இதை மறுத்து யூஸீஃப;) "இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடம்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்; "இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.

[12:27]

ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.

[12:28]

(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!

[12:29]

(என்றும்) "யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்" என்று: கூறினார்.

[12:30]