[10:79]

ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) "தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" எனக் கூறினான்.

[10:80]

அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், "நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்" என்று மூஸா அவர்களிடம் கூறினார்.

[10:81]

அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸர் "நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்" என்று கூறினார்.

[10:82]

இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).

[10:83]

ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.

[10:84]

மூஸா (தம் சமூகத்தவரிடம்); "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லீம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்" என்று கூறினார்.

[10:85]

(அதற்கு) அவர்கள்; "நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" என்று பிரார்த்தித்தார்கள்.

[10:86]

(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! (என்றும் பிரார்த்தித்தார்கள்.)

[10:87]

ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்; "நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!" என்று வஹீ அறிவித்தோம்.

[10:88]

இன்னும்; "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்" என்று மூஸா கூறினார்.