[9:123]

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறன். என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[9:124]

ஏதேனும் ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், "இது உங்களில் யாருடைய ஈமானை (நம்பிக்கையை) அதிகப்படுத்தி விட்டது?" என்று கேட்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர்; யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய நம்பிக்கையை இது (மெய்யாகவே) அதிகப்படுத்திவிட்டது இன்னும் அவர்கள் (இது குறித்து) மகிழ்ச்சி அடைகிறார்கள்.

[9:125]

ஆனால், எவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களுடைய (நெஞ்சங்களிலுள்ள) அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே (அது) அவர்களுக்கு அதிகப்படுத்தி விட்டது அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே மரிப்பார்கள்.

[9:126]

ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்" என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வதுமில்லை (அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை.

[9:127]

யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி' "உங்களை யாராவது பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.

[9:128]

(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

[9:129]

(நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) "எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!