[9:37]

(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.

[9:38]

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு உன்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.

[9:39]

நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது - அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.

[9:40]

(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், "கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்.