[9:7]

அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.

[9:8]

(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்.

[9:9]

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை.

[9:10]

அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும் உடன்படிக்கையையும் பொருட்படுத்த மாட்டார்கள்; மேலும் அவர்களே வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்."

[9:11]

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.

[9:12]

அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.

[9:13]

தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.