[8:34]

(இக்காரணங்கள்; இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது எனினும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.

[8:35]

அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்;) "நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்" (என்று).

[8:36]

நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.

[8:37]

அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.

[8:38]

நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)

[8:39]

(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகம்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

[8:40]

அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.