[7:144]

அதற்கு அவன், "மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக" என்று கூறினான்.

[7:145]

மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்" (என்று கூறினான்).

[7:146]

எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.

[7:147]

எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?

[7:148]

மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.

[7:149]

அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்; "எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.