[6:143]

(நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக.

[6:144]

இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை, மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.

[6:145]

(நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

[6:146]

நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.