[2:89]

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!

[2:90]

தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.

[2:91]

அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக.

[2:92]

நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.

[2:93]

தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும்.