[6:60]

அவன் தான் இரவில் உங்களை மரிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

[6:61]

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

[6:62]

பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.

[6:63]

(நபியே!) நீர் கூறும்; நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) "எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?"

[6:64]

இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே என்று கூறுவீராக.

[6:65]

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்." அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

[6:66]

(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, "நான் உங்கள் மீது பொருப்பாளன் அல்ல" என்று (நபியே!) நீர் கூறிவிடும்.

[6:67]

ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

[6:68]

(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.