[6:45]

எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்."

[6:46]

அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? என்று (நபியே!) நீர் கேட்பீராக, (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீர்ராக (இவ்வாறு இருந்தும); பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.

[6:47]

திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.

[6:48]

(நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[6:49]

ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.

[6:50]

(நபியே!) நீர் கூறும்; என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?"

[6:51]

இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.

[6:52]

(நயியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.