[6:36]

(சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர்தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.

[6:37]

(நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை"

[6:38]

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.

[6:39]

நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

[6:40]

(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்; "அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?" என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?

[6:41]

அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.

[6:42]

(நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் - அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

[6:43]

நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

[6:44]

அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.