Part 29

 

Al-Mulk

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[67:1]

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

[67:2]

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

[67:3]

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

[67:4]

பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.

[67:5]

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.

[67:6]

இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.

[67:7]

அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.

[67:8]

அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது, அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், "அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?" என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.

[67:9]

அதற்கவர்கள் கூறுவார்கள்; "ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, 'அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை, நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை" என்று சொன்னோம்."

[67:10]

இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்."

[67:11]

(இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.

[67:12]

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.

[67:13]

மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.

[67:14]

(அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்;றையும் நன்கு தெறிந்தவன்.

[67:15]

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

[67:16]

வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.

[67:17]

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

[67:18]

அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர், என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?

[67:19]

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுகிபவன்.

[67:20]

அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.

[67:21]

அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.

[67:22]

முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.

[67:23]

(நபியே!) நீர் கூறுவீராக: "அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்."

[67:24]

அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்று கூறுவீராக.

[67:25]

ஆயினும், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?" என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.

[67:26]

இதைப் பற்றி ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது, தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான் என்று (நபியே!) நீர் கூறும்.

[67:27]

எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும், இன்னும், "நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.

[67:28]

கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?

[67:29]

(நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான், அவன் மீதே நாங்கள் ஈமாக் கொண்டோம், மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!"

[67:30]

(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

 

Al-Qalam

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[68:1]

நூன், எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

[68:2]

உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.

[68:3]

இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.

[68:4]

மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

[68:5]

எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.

[68:6]

உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.

[68:7]

உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.

[68:8]

எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.

[68:9]

(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

[68:10]

அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;

[68:11]

(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.

[68:12]

(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன், வரம்பு மீறிய பெரும் பாவி.

[68:13]

கடின சித்தமுடையவன், அப்பால் இழி பிறப்புமுடையவன்.

[68:14]

பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால்

[68:15]

நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவன் கூறுகின்றான்.

[68:16]

விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.

[68:17]

நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்;டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.

[68:18]

அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை,

[68:19]

எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.

[68:20]

(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.

[68:21]

(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

[68:22]

நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள் (என்று கூறிக் கொண்டனர்).

[68:23]

எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்,

[68:24]

எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது (என்று).

[68:25]

உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.

[68:26]

ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: "நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்" என்று கூறினார்கள்.

[68:27]

(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) "இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்" (என்றும் கூறிக்கொண்டனர்.)

[68:28]

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்.

[68:29]

எங்கள் இறைவன் தூயவன், நாம் தாம் நிச்சமயாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம் என்றும் கூறினர்.

[68:30]

பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோகினர்.

[68:31]

அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.

[68:32]

எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம் (எனக் கூறினர்).

[68:33]

இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது, அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).

[68:34]

நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.

[68:35]

நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?

[68:36]

(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?

[68:37]

அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?

[68:38]

நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,

[68:39]

அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?

[68:40]

(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.

[68:41]

அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.

[68:42]

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.

[68:43]

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும்நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)

[68:44]

எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.

[68:45]

அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன், நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.

[68:46]

நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?

[68:47]

அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?

[68:48]

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:

[68:49]

அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.

[68:50]

ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.

[68:51]

மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; "நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்" என்றும் கூறுகின்றனர்.

[68:52]

ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.

 

Al-Hâqqah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[69:1]

நிச்சயமானது.

[69:2]

நிச்சயமானது எது?

[69:3]

அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?

[69:4]

ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.

[69:5]

எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

[69:6]

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

[69:7]

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

[69:8]

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

[69:9]

அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.

[69:10]

அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

[69:11]

தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.

[69:12]

அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).

[69:13]

எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:

[69:14]

இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -

[69:15]

அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.

[69:16]

வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.

[69:17]

இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

[69:18]

(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

[69:19]

ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார்.

[69:20]

நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.

[69:21]

ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -

[69:22]

உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.

[69:23]

அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும்.

[69:24]

சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள் (என அவர்களுக்குக் கூறப்படும்).

[69:25]

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!

[69:26]

அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-

[69:27]

(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?

[69:28]

என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!

[69:29]

என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்).

[69:30]

(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.

[69:31]

பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.

[69:32]

பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்).

[69:33]

நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.

[69:34]

அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.

[69:35]

எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.

[69:36]

சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.

[69:37]

குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.

[69:38]

ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

[69:39]

நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)

[69:40]

நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.

[69:41]

இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.

[69:42]

(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.

[69:43]

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.

[69:44]

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -

[69:45]

அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-

[69:46]

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

[69:47]

அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

[69:48]

ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.

[69:49]

ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

[69:50]

அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.

[69:51]

மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.

[69:52]

ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.

 

Al-Ma‘ârij

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[70:1]

(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

[70:2]

காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

[70:3]

(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

[70:4]

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

[70:5]

எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

[70:6]

நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

[70:7]

ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

[70:8]

வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-

[70:9]

இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-

[70:10]

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

[70:11]

அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

[70:12]

தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

[70:13]

அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

[70:14]

இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

[70:15]

அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.

[70:16]

அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

[70:17]

(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

[70:18]

அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)

[70:19]

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

[70:20]

அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,

[70:21]

ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.

[70:22]

தொழுகையாளிகளைத் தவிர-

[70:23]

(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.

[70:24]

அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.

[70:25]

யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).

[70:26]

அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.

[70:27]

இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.

[70:28]

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.

[70:29]

அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-

[70:30]

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.

[70:31]

எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.

[70:32]

இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

[70:33]

இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.

[70:34]

எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.

[70:35]

(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.

[70:36]

நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.

[70:37]

வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.

[70:38]

அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?

[70:39]

அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.

[70:40]

எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.

[70:41]

(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.

[70:42]

ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.

[70:43]

நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.

[70:44]

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.

 

Nûh

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[71:1]

நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்; "நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக" என (ரஸூலாக) அனுப்பினோம்.

[71:2]

என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் என்று கூறினார்.

[71:3]

அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் வழிபடுங்கள்.

[71:4]

(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்" (என்றும் கூறினார்).

[71:5]

பின்னர் அவர், "என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.

[71:6]

ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.

[71:7]

அன்றியும்; நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர், மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.

[71:8]

பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.

[71:9]

அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.

[71:10]

மேலும், "நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்" என்றுங் கூறினேன்.

[71:11]

(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.

[71:12]

அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

[71:13]

உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.

[71:14]

நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.

[71:15]

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?

[71:16]

இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.

[71:17]

அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.

[71:18]

பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.

[71:19]

அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.

[71:20]

அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்" (என்றும் போதித்தார்).

[71:21]

நூஹ் கூறினார்: "என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர், அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.

[71:22]

மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.

[71:23]

மேலும் அவர்கள்; "உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்றும் சொல்கின்றனர்.

[71:24]

நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர், ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.

[71:25]

ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.

[71:26]

அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.

[71:27]

நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.

[71:28]

என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே" (என்றும் கூறினார்).

 

Al-Jinn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[72:1]

நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

[72:2]

அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம் (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

[72:3]

மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

[72:4]

ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

[72:5]

மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

[72:6]

ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

[72:7]

இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

[72:8]

நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

[72:9]

(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.

[72:10]

அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

[72:11]

மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

[72:12]

அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.

[72:13]

இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

[72:14]

இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

[72:15]

அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்" (என்று அந்த ஜின் கூறிற்று).

[72:16]

(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.

[72:17]

அதைக் கொண்டு நாம் அவர்களைச் சோதிப்பதற்காக, ஆகவே, எவன் தன் இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கிறானோ, அவனைக் கொடிய வேதனையில் அவன் புகுத்தி விடுவான்.

[72:18]

அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.

[72:19]

மேலும், நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் அவனைப் பிரார்த்தித்தவராக நின்றபோது, அவர்பால் அவர்கள் கூட்டம் கூட்டமாக (வந்து) நெருங்கிவிடுகின்றனர்."

[72:20]

(நபியே!) நீர் கூறும்; "நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்."

[72:21]

கூறுவீராக, "நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்."

[72:22]

கூறுவீராக, "நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

[72:23]

அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பர் என (நபியே!) நீர் கூறும்.

[72:24]

அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) அவர்கள் பார்க்கும் போது, எவருடைய உதவியாளர்கள் மிக பலஹீனமானவர்கள் என்பதையும், எண்ணிக்கையில் மிகக் குறைந்தவர்கள் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

[72:25]

(நபியே!) நீர் கூறும், "உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது (அவ்வேதனை) சமீபமா, அல்லது என்னுடைய இறைவன் அதற்குத் தவணை ஏற்படுத்தியிருக்கிறானா என்பதை நான் அறியேன்.

[72:26]

(அவன்தான்) மறைவனாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.

[72:27]

தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.

[72:28]

தங்களுடைய இறைவனின் தூதுத்துவச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.

 

Al-Muzzammil

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[73:1]

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

[73:2]

இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக,

[73:3]

அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

[73:4]

அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

[73:5]

நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.

[73:6]

நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.

[73:7]

நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.

[73:8]

எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.

[73:9]

(அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.

[73:10]

அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக, மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.

[73:11]

என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.

[73:12]

நிச்சமயாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.

[73:13]

(தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.

[73:14]

அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்.

[73:15]

நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.

[73:16]

எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான் எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.

[73:17]

எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.

[73:18]

அதில் வானம் பிளந்து விடும் அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.

[73:19]

நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபபதேசமாகும் ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.

[73:20]

நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவே, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான், அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான், அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான். ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான், ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள், நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

 

Al-Muddaththir

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[74:1]

(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!

[74:2]

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.

[74:3]

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.

[74:4]

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

[74:5]

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.

[74:6]

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.

[74:7]

இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.

[74:8]

மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-

[74:9]

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.

[74:10]

காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.

[74:11]

என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.

[74:12]

இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.

[74:13]

அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).

[74:14]

இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.

[74:15]

பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.

[74:16]

அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.

[74:17]

விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.

[74:18]

நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.

[74:19]

அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?

[74:20]

பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?

[74:21]

பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.

[74:22]

பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.

[74:23]

அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.

[74:24]

அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.

[74:25]

இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை (என்றும் கூறினான்.)

[74:26]

அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.

[74:27]

ஸகர் என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?

[74:28]

அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.

[74:29]

(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.

[74:30]

அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.

[74:31]

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

[74:32]

(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.

[74:33]

இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.

[74:34]

விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

[74:35]

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.

[74:36]

(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-

[74:37]

உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).

[74:38]

ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.

[74:39]

வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர

[74:40]

(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-

[74:41]

குற்றவாளிகளைக் குறித்து-

[74:42]

உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? (என்று கேட்பார்கள்.)

[74:43]

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

[74:44]

அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

[74:45]

(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

[74:46]

இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

[74:47]

உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).

[74:48]

ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.

[74:49]

நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?

[74:50]

அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

[74:51]

(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

[74:52]

ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.

[74:53]

அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.

[74:54]

அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

[74:55]

(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,

[74:56]

இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.

 

Al-Qiyâmah

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[75:1]

கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:2]

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

[75:3]

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?

[75:4]

அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

[75:5]

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.

[75:6]

கியாம நாள் எப்போழுது வரும்? என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.

[75:7]

ஆகவே, பார்வையும் மழுங்கி-

[75:8]

சந்திரன் ஒளியும் மங்கி-

[75:9]

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும் .

[75:10]

அந்நாளில் "(தப்பித்துக் கௌ;ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

[75:11]

இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை! (என்று கூறப்படும்).

[75:12]

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.

[75:13]

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.

[75:14]

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.

[75:15]

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!

[75:16]

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.

[75:17]

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.

[75:18]

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.

[75:19]

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.

[75:20]

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.

[75:21]

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

[75:22]

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

[75:23]

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.

[75:24]

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

[75:25]

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

[75:26]

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,

[75:27]

மந்திரிப்பவன் யார்? எனக் கேட்கப்படுகிறது.

[75:28]

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

[75:29]

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

[75:30]

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

[75:31]

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.

[75:32]

ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

[75:33]

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

[75:34]

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

[75:35]

பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

[75:36]

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

[75:37]

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

[75:38]

பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

[75:39]

பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

[75:40]

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

 

Al-Insân

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[76:1]

திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

[76:2]

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

[76:3]

நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

[76:4]

காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.

[76:5]

நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,

[76:6]

(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.

[76:7]

அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.

[76:8]

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.

[76:9]

உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை (என்று அவர்கள் கூறுவர்).

[76:10]

எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம் (என்றும் கூறுவர்).

[76:11]

எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.

[76:12]

மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.

[76:13]

அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

[76:14]

மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

[76:15]

(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.

[76:16]

(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.

[76:17]

மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.

[76:18]

'ஸல்ஸபீல்' என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

[76:19]

இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.

[76:20]

அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.

[76:21]

அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

[76:22]

நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று (என்று அவர்களிடம் கூறப்படும்).

[76:23]

நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.

[76:24]

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.

[76:25]

காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.

[76:26]

இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.

[76:27]

நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.

[76:28]

நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.

[76:29]

நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.

[76:30]

எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.

[76:31]

அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.

 

Al-Mursalât

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[77:1]

தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக

[77:2]

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-

[77:3]

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-

[77:4]

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-

[77:5]

(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-

[77:6]

(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)

[77:7]

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.

[77:8]

இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-

[77:9]

மேலும், வானம் பிளக்கப்படும் போது-

[77:10]

அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-

[77:11]

மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-

[77:12]

எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?

[77:13]

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.

[77:14]

மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

[77:15]

(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.

[77:16]

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?

[77:17]

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.

[77:18]

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).

[77:19]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:20]

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

[77:21]

பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

[77:22]

ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.

[77:23]

இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

[77:24]

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:25]

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

[77:26]

உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

[77:27]

அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

[77:28]

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:29]

நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

[77:30]

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

[77:31]

(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

[77:32]

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

[77:33]

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

[77:34]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:35]

இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

[77:36]

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

[77:37]

பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:38]

இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

[77:39]

எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.

[77:40]

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:41]

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

[77:42]

இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

[77:43]

நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள் (என்று கூறப்படும்).

[77:44]

நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

[77:45]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:46]

(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

[77:47]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:48]

'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

[77:49]

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

[77:50]

எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?