Part 22

 

[33:31]

அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.

[33:32]

நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

[33:33]

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

[33:34]

மேலும் உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள் (அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.

[33:35]

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

[33:36]

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.

[33:37]

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

[33:38]

நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.

[33:39]

(இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

[33:40]

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.

[33:41]

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.

[33:42]

இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.

[33:43]

உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான்.

[33:44]

அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் "ஸலாமுன்" (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

[33:45]

நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.

[33:46]

இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)

[33:47]

எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!

[33:48]

அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.

[33:49]

ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்' செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

[33:50]

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.

[33:51]

அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன் தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர் நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். (இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.

[33:52]

இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே - ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன்.

[33:53]

முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

[33:54]

நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.

[33:55]

(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.

[33:56]

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

[33:57]

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.

[33:58]

ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.

[33:59]

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

[33:60]

முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.

[33:61]

அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.

[33:62]

அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.

[33:63]

(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது சமீபத்திலும் வந்து விடலாம்.

[33:64]

நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.

[33:65]

அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பாவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.

[33:66]

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ", கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.

[33:67]

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவார்கள்.

[33:68]

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக (என்பர்).

[33:69]

ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய மிக்கவராகவே இருந்தார்.

[33:70]

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

[33:71]

(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.

[33:72]

நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.

[33:73]

எனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்;களையும்;, முனாஃபிக்கான பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

 

Saba

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[34:1]

அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.

[34:2]

பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.

[34:3]

எனினும் நிராகரிப்பவர்கள்; "(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.

[34:4]

ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது) அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.

[34:5]

மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.

[34:6]

எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.

[34:7]

ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்; "நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.

[34:8]

அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது "பொய்யை இட்டுக் கட்டுகிறாரா அல்லது இவருக்கு பைத்தியமா?" (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.

[34:9]

வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.

[34:10]

இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.

[34:11]

வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன் (என்றும் சொன்னோம்.)

[34:12]

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).

[34:13]

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).

[34:14]

அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.

[34:15]

நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன "உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்" (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).

[34:16]

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.

[34:17]

அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?

[34:18]

இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பதைகளையு)ம் அமைத்தோம்; "அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்).

[34:19]

ஆனால், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!" என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.

[34:20]

அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.

[34:21]

எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.

[34:22]

அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.

[34:23]

அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் உங்கள் இறைவன் என்ன கூறினான்" என்று கேட்பார்கள். "உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்" என்று கூறுவார்கள்.

[34:24]

வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்? என்று (நபியே!) நீர் கேளும்; "அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்" என்றும் கூறும்.

[34:25]

நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம் என்றும் கூறுவீராக.

[34:26]

நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன் என்றும் கூறுவீராக.

[34:27]

அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன் என்றும் சொல்லும்.

[34:28]

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

[34:29]

இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்; "உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?" என்று.

[34:30]

(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

[34:31]

இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம் என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள் இந்த அநியாயக் காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள்.

[34:32]

பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், "உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.

[34:33]

அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?

[34:34]

அன்றியும் அச்சமூட்டி எச்சிரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; "நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிரரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை.

[34:35]

இன்னும்; "நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்" என்றும் கூறுகிறார்கள்.

[34:36]

நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.

[34:37]

இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.

[34:38]

அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.

[34:39]

நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன் என்று (நபியே!) நீர் கூறும்.

[34:40]

(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் "இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்" என்று (அல்லாஹ்) கேட்பான்.

[34:41]

(இதற்கு மலக்குகள்;) "நீ மிகத் தூய்மையானவன்; நீயே எஙகள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்" என்று கூறுவார்கள்.

[34:42]

இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அறியாயம் செய்தார்களே அவர்களிடம் நாம் கூறுவோம்.

[34:43]

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் "இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.

[34:44]

எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.

[34:45]

மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூரட்டும்)

[34:46]

நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள் என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை உங்களுக்கு கடினமான வேதனை வரவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை."

[34:47]

கூறுவீராக "நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்கியாக இருக்கின்றான்."

[34:48]

கூறுவீராக "என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்."

[34:49]

கூறுவீராக "சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை இனிச்செய்யப் போவதுமில்லை."

[34:50]

கூறுவீராக "நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு 'வஹீ' மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சமயாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்."

[34:51]

இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நிர் காண்பீராயின்; அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.

[34:52]

மேலும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்" என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?

[34:53]

ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.

[34:54]

மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.

 

Fâtir

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[35:1]

அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.

[35:2]

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

[35:3]

மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.

[35:4]

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.

[35:5]

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.

[35:6]

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.

[35:7]

எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.

[35:8]

எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.

[35:9]

மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.

[35:10]

எவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.

[35:11]

அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.

[35:12]

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீராக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

[35:13]

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.

[35:14]

நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.

[35:15]

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.

[35:16]

அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.

[35:17]

இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.

[35:18]

(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.

[35:19]

குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.

[35:20]

(அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).

[35:21]

(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).

[35:22]

அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.

[35:23]

நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.

[35:24]

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.

[35:25]

இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்க்ள.

[35:26]

பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.

[35:27]

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.

[35:28]

இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

[35:29]

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.

[35:30]

அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.

[35:31]

(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.

[35:32]

பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வி;ன அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.

[35:33]

அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டா(லானவையா)க இருக்கும்.

[35:34]

எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன் என்றும் அவர்கள் கூறுவார்கள்.

[35:35]

அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான தங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை (என்றும் கூறுவார்கள்).

[35:36]

எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.

[35:37]

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) "சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை" (என்று கூறுவான்).

[35:38]

நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.

[35:39]

அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.

[35:40]

அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா? என்று (நபியே!) நீர் கேட்பீராக அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை" (என்று நபியே! நீர் கூறும்).

[35:41]

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.

[35:42]

அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.

[35:43]

(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.

[35:44]

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.

[35:45]

மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.

 

Yâ-Sîn

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[36:1]

யாஸீன்.

[36:2]

ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!

[36:3]

நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.

[36:4]

நேரான பாதை மீது (இருக்கின்றீர்).

[36:5]

(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.

[36:6]

எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

[36:7]

இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நி;ச்சயமாக உண்மையாகிவிட்டது ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

[36:8]

நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.

[36:9]

இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.

[36:10]

இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

[36:11]

நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.

[36:12]

நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.

[36:13]

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.

[36:14]

நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்" என்று அவர்கள் கூறினார்கள்.

[36:15]

(அதற்கு அம்மக்கள்;) "நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை" என்று கூறினார்கள்.

[36:16]

(இதற்கு அவர்கள்;) "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்" என்று கூறினர்.

[36:17]

இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (என்றும் கூறினார்).

[36:18]

(அதற்கு அம்மக்கள்;) கூறினார்கள்; "நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்."

[36:19]

அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்; "உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.

[36:20]

(அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); "என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்" என்று கூறினார்.

[36:21]

உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள் (என்றும் அவர் கூறினார்).

[36:22]

அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

[36:23]

அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.

[36:24]

(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.

[36:25]

உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்."

[36:26]

(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) "நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக' என்று (அவரிடம்) கூறப்பட்டது. "என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்."

[36:27]

என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான் (என்பதை).