Part 13

 

[12:53]

அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான் (என்றுங் கூறினார்).

[12:54]

இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.

[12:55]

(யூஸுஃப்) கூறினார்; "(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்."

[12:56]

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

[12:57]

மேலும், பயபக்தியுடையவர்களாக முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.

[12:58]

(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,

[12:59]

(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) "உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் "சிறந்தவன்" என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

[12:60]

ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது என்று கூறினார்.

[12:61]

அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான் என்று கூறினார்கள்.

[12:62]

(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.

[12:63]

அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி; "எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள்.

[12:64]

அதற்கு (யஃகூப்; "இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்" என்று கூறிவிட்டார்.

[12:65]

அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்.

[12:66]

அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்.

[12:67]

(பின்னும்) அவர், "என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வௌ;வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை அவன் மீதே நான் முழமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!" என்று கூறினார்.

[12:68]

(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை நாம் அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.

[12:69]

(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து "நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யூஸுஃப்) அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்" என்று (இரகசியமாகக்) கூறினார்.

[12:70]

பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!" என்று கூறினார்.

[12:71]

(அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, "நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்" எனக் கேட்டார்கள்.

[12:72]

நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி என்று கூறினார்கள்.

[12:73]

(அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்" என்றார்கள்.

[12:74]

(அதற்கு) அவர்கள், "நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டார்கள்.

[12:75]

அதற்குரிய தண்டனையாவது, "எவருடைய சமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்" என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.

[12:76]

ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய கொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம்(சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!

[12:77]

(அப்போது) அவர்கள், "இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்" என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் "நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்" என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.

[12:78]

அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும், நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வோரில் ஒருவராகவே காண்கிறோம்' என்று கூறினார்கள்.

[12:79]

அதற்கவர், 'எங்கள் பொருறை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சமயாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

[12:80]

எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலொசனை செய்தார்கள். அவர்களுள் பெரியவர் சொன்னார்; நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.

[12:81]

ஆகவே, "நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, 'எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்.;

[12:82]

நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்' (என்றும் சொல்லுங்கள்" என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).

[12:83]

(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) "இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

[12:84]

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி "யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

[12:85]

(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.

[12:86]

அதற்கவர், "என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);

[12:87]

என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.

[12:88]

அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; "அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறேன்" என்று கூறினார்கள்.

[12:89]

(அதற்கு அவர்?) "நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று வினவினார்.

[12:90]

(அப்போது அவர்கள்) "நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்ததைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்" என்று கூறினார்.

[12:91]

அதற்வர்கள் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்" என்று கூறினார்கள்.

[12:92]

அதற்வர், "இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்" என்று கூறினார்.

[12:93]

என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள் (என்று கூறினார்).

[12:94]

(அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, "நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!" என்றார்.

[12:95]

(அதற்கவர்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறினாலேயே இருக்கின்றீர்கள்" என்று சொன்னார்கள்.

[12:96]

பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; "நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?" என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,

[12:97]

(அதற்கு அவர்கள்) "எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.

[12:98]

நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.

[12:99]

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார்.

[12:100]

இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார்.

[12:101]

என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!' (என்று அவர் பிரார்த்தித்தார்.)

[12:102]

 

(நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.

[12:103]

ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.

[12:104]

இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இஃது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.

[12:105]

இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.

[12:106]

மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.

[12:107]

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?

[12:108]

(நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."

[12:109]

(நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?

[12:110]

(நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.

[12:111]

(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.

 

Ar-Ra‘d

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[13:1]

அலிஃப், லாம், மீம், றா. இவை வேதத்தின் வசனங்களாகவும். மேலும் (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்புவதில்லை.

[13:2]

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.

[13:3]

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

[13:4]

இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.

[13:5]

(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், "நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.

[13:6]

(நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்.

[13:7]

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.

[13:8]

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது,

[13:9]

(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

[13:10]

எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அலலது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).

[13:11]

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

[13:12]

அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.

[13:13]

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

[13:14]

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.

[13:15]

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன் அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸங்தா செய்கின்றன).

[13:16]

(நபியே! அவர்களிடம்;) "வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?" என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்; "(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்"; மேலும், கூறும்; "குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!" (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்; "அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்" என்று.

[13:17]

அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான்.

[13:18]

எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ள வில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருள்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகவும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.

[13:19]

உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையன அறிகிறவர் குரடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.

[13:20]

அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.

[13:21]

மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.

[13:22]

இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.

[13:23]

நிலையான (அந்த) சவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.

[13:24]

நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக 'ஸலாமுன் அலைக்கும்' (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று! (என்று கூறுவார்கள்.)

[13:25]

எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான் அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.

[13:26]

அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் - இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிடாமல் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.

[13:27]

இவருக்கு இவருடைய இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சி இறக்கி வைக்கப்படக் கூடாதா என்று நிராகரிப்போர் கூறுகிறார்கள், (நபியே!) நீர் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்" என்று

[13:28]

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

[13:29]

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்கலோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு; இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.

[13:30]

(நபியே!) நாம் உம்மை இவ்வாறே ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; இவர்களுக்கு முன்னரும் பல கூட்டத்தினர் நிச்சயமாகச் சென்றிருக்கிறார்கள்; நாம் உம் மீது எதை வஹீயாக அறிவித்தோமோ அதை இவர்களுக்கு ஓதிக்காண்பிப்பதற்காக (உம்மை அனுப்பினோம்); ஆனால் இவர்களோ அர்ரஹ்மா(ன் எனும் அருள் மிக்க இறைவ)னையே நிராகரிக்கின்றனர். அவர்களிடம்; "அவனே என் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயன் எவனுமில்லை அவன் மீதே நாம் முழமையாக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவனிடமே (என்னுடைய) மீட்சியும் இருக்கிறது' என்று நீர் கூறுவீராக!

[13:31]

நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசம்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன் ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.

[13:32]

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் (வந்து சென்ற நம்) தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டனர்; ஆகவே, நிராகரித்துக் கொண்டிருந்தோருக்கு நான் தவணையளித்துப் பின்னர் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்; ஆகவே, (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (என்பதைச் சிந்திப்பார்களாக!)

[13:33]

ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்; "அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?" என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.

[13:34]

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் வேதனையுண்டு, மறுமையின் வேதனை மிகக் கடுமையானது - அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை.

[13:35]

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சவனபதியின் தன்மையானது - அதன் கீழே நீர் அருவிகள் (என்றென்றும்) ஓடிக் கெண்டிருக்கும்; அதன் ஆகாரமும், அதன் நிழலும் நிலையானவை இது தான் பயபக்தியுடையோரின் முடிவாகும்; காஃபிர்களின் முடிவோ (நரக) நெருப்பேயாகும்.

[13:36]

எவர்களுக்கு நாம் (முன்னர்) வேதத்தை அளித்தோமோ, அவர்கள் (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பற்றி மகிழ்வார்கள்; எனினும் இதன் சில பகுதிகளை மறுக்கிறவர்களும் (அவர்களுடைய) கூட்டதில் ஏவப்பட்டிருப்பதெல்லாம், அல்லாஹ் - (ஒருவனையே) வணங்க வேண்டும்; அவனுக்கு (எதனையும், எவரையும்) இணைவைக்கக் கூடாது என்பது தான்; நான் (உங்களை) அவன் பக்கமே அழைக்கின்றேன்; அவன் பாலே (என்) மீட்சியும் இருக்கிறது" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[13:37]

(நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார்.

[13:38]

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.

[13:39]

(எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.

[13:40]

(நபியே!) அவர்களுக்கு நாம் வாக்களித்தவற்றில் சிலதை (உம் வாழ் நாளிலேயே உம் கண்ணால்) நீர் காணும்படிச் செய்தாலும், அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (அதைப் பற்றி நீர் விசாரப்பட வேண்டாம்); உம்முடைய கடமையெல்லாம் (நம்முடைய கட்டளையை அவர்களிடம்) சேர்ப்பிப்பது தான்; (அவர்களிடம்) கணக்கு வாங்குதல் நம்மிடம் இருக்கிறது.

[13:41]

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

[13:42]

(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே பல) சூழ்ச்சிகளைச் செய்துகொண்டிருந்தனர்; எனினும் எல்லா சூழ்ச்சிக(ளின் முடிவுக)ளும் அல்லாஹ்விடமே இருக்கின்றன் ஒவ்வோர் ஆத்மா சம்பாதிப்பதையும் அவன் நன்கறிவான்; மேலும், (மறுமையில்) எவர்களுக்கு நல்ல வீடு உரியது என்பதை காஃபிர்கள் சீக்கரத்தில் அறிந்து கொள்வார்கள்.

[13:43]

(நபியே!) நீர் (இறைவனால் அனுப்பப்பட்ட) தூதர் அல்லர் என்று காஃபிர்கள் சொல்கிறார்கள்; எனக்கும், உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்க அல்லாஹ்வும், வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்களும் போதுமானவர்கள்" என்று நீர் கூறிவிடுவீராக!

 

Ibrâhîm

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[14:1]

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).

[14:2]

அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தாமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.

[14:3]

இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.

[14:4]

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

[14:5]

நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, "நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக" என்று கட்டளையிட்டோம்; நிச்சமயாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.

[14:6]

மூஸா தம் சமூகத்தாரிடம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது" என்று கூறினார்,

[14:7]

("இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).

[14:8]

மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) "நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்" என்றும் கூறினார்.

[14:9]

உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, "நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சமயாக நாங்கள் நிராகரிக்கின்றோம் அன்றிpயும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள்.

[14:10]

அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் "வானங்களையும் பூமியையம் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்" என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்" எனக் கூறினார்கள்.

[14:11]

(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்" என்று கூறினார்கள்.

[14:12]

அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சமயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)

[14:13]

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள், அப்போது "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.

[14:14]

நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும் (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).

[14:15]

ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.

[14:16]

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.

[14:17]

அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

[14:18]

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.

[14:19]

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.

[14:20]

இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினானதுமல்ல.

[14:21]

அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி; "நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?" என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!" என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.

[14:22]

(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு" என்று கூறுவான்.

[14:23]

இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்திருக்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது "ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!") என்பதாகும்.

[14:24]

(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.

[14:25]

அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.

[14:26]

(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நற்கும் தன்மையுமில்லை.

[14:27]

எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானனோ அதைச் செய்கின்றான்.

[14:28]

அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?

[14:29]

(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.

[14:30]

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, "இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்" என்று நீர் கூறிவிடும்.

[14:31]

ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) "கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்" என்று நீர் கூறுவீராக.

[14:32]

அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.

[14:33]

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.

[14:34]

(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.

[14:35]

நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

[14:36]

("என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்."

[14:37]

எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!

[14:38]

எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.

[14:39]

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.

[14:40]

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"

[14:41]

எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக (என்று பிரார்த்தித்தார்).

[14:42]

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.

[14:43]

(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.

[14:44]

எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்" என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) "உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?" (என்றும்)

[14:45]

அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும்; உங்களுக்கு தெளிவாக்கப் பட்டது இன்னும் நாம் உங்களுக்கு(ப் பலமுன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).

[14:46]

எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.

[14:47]

ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.

[14:48]

இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

[14:49]

இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

[14:50]

அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

[14:51]

அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

[14:52]

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.